இஸ்லாமிய பெருமக்கள் வருடந்தோறும் பின்பற்றும் ஒரு சிறப்புமிக நிகழ்வு "ரமலான்" நோம்பு. மனித குலத்திற்கு என்றும் பொருந்தும் பல வாழ்வியல் தத்துவங்கள் அடங்கிய "ரமலானை" பற்றி நாமும் அறிந்து கொள்வோம்.
1) நோம்பு என்பதை ஒரு கடமையாக ஒவ்வொரு இஸ்லாமியரும் கருத வேண்டும் என்று நபிகள் பெருமான் (ஸல்) கூறியுள்ளார். பசி துறத்தல், மத கோட்பாடு என்ற எந்த ஒரு நோக்கமும் நோம்பிருப்பதின் பின்னணி ஆகாது. இறைவன் கூற்றின் படி இறையச்சம் ஏற்படுவதற்காக மட்டும் தான் இந்த சடங்கு கடமையாக கருதப்படுகிறது. அல்லாஹ் கூறுகின்ற ஒரே காரணமும் இதுதான்.
2) மிராஜ் இரவில் அல்லாஹ்வை சந்தித்தார் நபிகள் நாயகம். அல்லாஹ் அவரிடம் "எனக்காக உங்கள் சமூகத்தார் வருடம் தோறும் நோம்பு நூர்க்க வேண்டும்” என கட்டளை இட்டார். நபிகள் அச்சமடைந்தார். தனது சமூகத்திற்காக இறைஞ்சினார். 1 வருடத்தை இறைவன் 6 மாதமாக குறைத்தார். "எனது சமூகத்தாரால் இதை தாங்கி கொள்ள இயலாது" என நபிகள் மீண்டும் மன்றாடினார். 5,4,3 என இறுதியில் 1 மாதம் என்று இறைவன் கருணை புரிந்தார். 1 மாதம் நோம்பு என்று இவ்வாறு தான் முஸ்லிம்களுக்கு கடமையானது.
3) ஹிரா எனும் குகையில் நபிகள் தனிமையில் இறை தியானத்தில் மூழ்கி இருந்த போது தான் அவர் முன் வானவர் "ஜப்ரீல்" தோன்றி குர் ஆன் வேதத்தை ஓதினார் என கூறப்படுகிறது.
4) ரமலான் மாதத்தின் ஓர் இரவில் தான் திரு குர் ஆன் அருளப்பட்டதால், இம்மாதத்திற்கு தனி சிறப்பு அளிக்கப்படுகிறது.
5) ஹிஜ்ரி இரண்டாம் ஆண்டு தான் ரமலான் நோம்பு கடமையாக்கப்பட்டது.
6) முந்தைய இறை தூதர்களாகிய "இப்ரஹிம் நபி, தாவூத் நபி, மூஸா நபி" ஆகியோருக்கும் ரமலான் மாதத்தில் தான் ஆகமங்களும் ,வேதங்களும் அருளப்பட்டன.
7) நோயாளிகள் மற்றும் பயணம் மேற்கொள்வோர் தவிர்த்து, வயது வந்த அனைவர் மீதும் நோம்பு கடமை ஆக்கப்பட்டிருக்கிறது.
8) அறிவு தேடலுக்கும், மெய்-ஞானத்திற்கும் ஊக்கமளிக்கும் வகையில் திரு குர் ஆனின் முதல் வசனம் "ஓதுவீராக" என அருளப்பட்டது.
9) ரமலான் மாத்தத்தின் ஓர் இரவில் குர் ஆன் அருளப்பட்டதால், அந்த புனித இரவு "லைலத்துல் கத்ர்" (மாட்சிமை மிக்க இரவு) என அழைக்கப்படுகிறது.
10) திரு குர் ஆனில், முப்பது பாகங்களும், 114 அத்தியாயங்களும், 6666 வசனங்களும் உள்ளன. ரமலான் மாதத்தின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பாகம் ஓதப்படுகிறது.
11) ரமலான் மாதத்தில் செய்யப்படும் நற்செயல்களுக்கு பல்மடங்கு நற்கூலி வழங்கப்படும் என நபிகள் அறிவித்துள்ளார்.
12) தூய ரமலானில் வசதி படைத்தவர்கள் "ஜகாத்" எனும் கட்டாய தர்மத்தை எளியோர்க்கு வழங்குதல் அவசியம் என வலியுறுத்தப்படுகிறது.
13) ஒருவரின் வருமானத்தில் செலவுகள் எல்லாம் போக, மிஞ்சி இருக்கும் தொகையில் இரண்டரை சதவிகிதம் தர்மத்திற்கு வழங்குதல் வேண்டும் என்ற கோட்பாடே "ஜகாத்" என்று அழைக்கப்படுகிறது.
14) இஸ்லாமியர்கள் தங்களிடம் உள்ள தங்கம், வெள்ளி, வணிக சரக்குகள், வாடகைக்கு விடப்பட்ட கட்டிடங்கள், வேளாண் பொருட்கள், கால் நடைகள் போன்ற அனைத்தையும் கணக்கிட்டு ஜகாத் வழங்க வேண்டும்.
15) வசதி இருந்தும் ஜகாத் வழங்காதவர்கள் மறுமையில் கடும் தண்டனை பெறுவார்கள் என குர் ஆன் எச்சரித்துள்ளது.
16) ரமலானின் கடைசி 10 நாட்களில் "இஃதிகாப்" எனும் உயர் ஆன்மீக வழிபாடு பேணப்படுகிறது.
17) வீடு, தொழில், மனைவி, மக்கள் என உலகியல் காரியங்களிருந்து விடுபட்டு, 10 நாட்களும் பள்ளிவாசலில் தங்கி இருந்து இறைவனை வழிபடுவதை "இஃதிகாப்" என்று அழைக்கிறார்கள்.
18) நபிகள் நாயகத்திற்கு மிகவும் பிடித்த உணவாக பேரீசம்பழம் இருந்தது. பல நாட்கள் அவர் இதையே உண்டு பசியாற்றினார். அதனால் தான் இதற்கு இஸ்லாமியர்கள் இடையில் இத்தனை மதிப்பு. நோம்பு துறந்த உடன் அருந்தும் உணவாக பேரீசம்பழம் கருதப்படுகிறது.
19) பணி நிமித்தமாக தங்கள் இல்லங்களுக்கு சென்று நோம்பு துறக்க இயலாதவர்களுக்காக தான் "இஃப்தார்" விருந்து அமைக்கப்பட்டது. தங்கள் பணி இடத்திற்கு அருகில் உள்ள பள்ளி வாசலுக்கு சென்று நோம்பு துறக்க இவ்விருந்து வசதியாக அமைந்தது.
20) "நோம்பாளிகள் மதிய நேரத்தில் உறங்குங்கள், அப்போது தான் இரவில் விழித்திருந்து தொழுகை நடத்த முடியும்" என நபிகள் பெருமான் கூறியுள்ளார்.
21) ரமலான் மாதம் முடிந்து ஷவ்வால் மாதம் தொடங்கும் முதல் நாளில் ஈகை திருநாள் கொண்டாடப்படுகிறது.
22) பெருநாள் சிறப்பு தொழுகைக்கு செல்லும் முன் "ஃபித்ரா" எனும் பெரு நாள் தர்மத்தை ஏழைகளுக்கு வழங்கிடல் வேண்டும்.
23) நோம்பு வைப்பதால் உடல் உஷ்ணம் உண்டாகிறது, அவ்வாறு உண்டாகும் உஷ்ணத்தை தணிக்கவே நோம்பு கஞ்சி கட்டாயமாக ரம்ஜானில் தயாரிக்கப்படுகிறது.
24) ரமலான் மாதம் முழுவதும் "தராவீஹ்" எனும் சிறப்பு தொழுகை நடை பெறுகிறது.
25) ரமலான் மாதம் முழுவதும் நோம்பிருப்பதை தவிர, மற்ற மாதங்களிலும் மூன்று நாட்கள் நோம்பிருப்பதை, குர் ஆன் வலியுறுத்துகிறது.
என் முஸ்லிம் சகோதர சகோதரிகள் அனைவருக்கும்
என் இனிய ரமலான் வாழ்த்துக்கள் !