ரமலான் மாதச் சிறப்பு தொகுப்பு
ரமலான் மாதம் அருள் நிறைந்த மாதம், நன்மைகளை அதிகம் செய்யும் மாதம், பிழைப்பொறுப்புத் தேடும் மாதம், அல்லாஹ்வை அதிகம் நெருங்கும் வாய்ப்பைப் பெறும் மாதம், சுவர்க்கத்தின் வாசல்கள் திறக்கப்பட்டு நரகத்தின் வாசல்கள் மூடப்படும் மாதம், சாத்தான்கள் விலங்கிடப்படும் மாதம், ஆயிரம் மாதங்களை விட சிறப்புமிக்க ஒரு இரவைக் கொண்ட மாதம், நரகவாதிகள் நரகத்திலிருந்து விடுதலை பெறும் மாதம், குர்ஆனை இப்பூவுலகத்தில் இறக்குவதற்கு அல்லாஹ் தேர்ந்தெடுத்த மாதம், துஆக்கள் அங்கீகரிக்கப்படும் மாதம் என்று இந்த மாதத்திற்கு பல சிறப்புக்கள் இருப்பதாக இஸ்லாமிய மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர்.
இம்மாதத்திலும் நன்மைகள் செய்யாதவர் எல்லா நன்மைகளையும் இழந்தவர் என்றும் இந்த மாதத்தில் அல்லாவிடம் பாவமன்னிப்புக் கேட்காதவர் அல்லாவின் அருளை விட்டுத் தொலைவில் இருப்பார்கள் என்றும் நபி(ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்.
நோன்பின் முக்கியத்துவம்
வணக்கங்களைச் செய்பவர்களுக்கு கூலியாக மறுமையில் சுவர்க்கத்தை ஏற்பாடு செய்து வைத்திருக்கின்றான் என்பது இஸ்லாமிய நம்பிக்கையாகும். இந்த வணக்கங்களின் வரிசையில் ஒன்றாக உள்ளதுதான் நோன்பு. நோன்பு என்னும் வணக்கம் மற்ற வணக்கங்களிலிருந்து எதிர்பார்க்கப்படும் தியாகங்களுக்கு முற்றிலும் மாறுபடுகின்றது. நோன்பு என்பது பசி, தாகம், இச்சை, இவைகளை இறைவனிடத்திலுள்ள நன்மையை எதிர்பார்த்தவராக நோன்பு மாதத்தின் பகல் நேரத்தில் கட்டுப்படுத்திக் கொள்வதாகும். இது ஒரு சடங்காகக் கருதாமல் வணக்கம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் செய்வதாகக் கொள்ளப்படுகிறது. நோன்பின் நோக்கமே இறையச்சத்தை ஏற்படுத்திக் கொள்வதுதான்.
இறையச்சம் என்பது அல்லாவிற்கு பயந்து, அவன் அறிவுறுத்தியவைகளை செய்தும், தடை செய்தவைகளை தவிர்த்தும் நடப்பதுதான். இஸ்லாம் நோன்பாளி, யாருக்கும் தெரியாத இடத்தில் தனிமையில் இருக்கும் போதும் பசியுள்ளவராக இருந்தும் தன்னிடத்திலுள்ள உணவை உண்ணக் கூடாது. தாகமுள்ளவராக இருந்தும் எதையும் குடிக்கக் கூடாது. இச்சை இருந்தும் அதை நிறைவேற்றக் கூடாது.
எல்லா வணக்கங்களும் அல்லாவுக்கே உரியன. அவனே எல்லா வணக்கங்களுக்கும் கூலி கொடுக்கின்றான். ரமலான் நோன்பு உண்மையான இறையச்சத்தோடும் மனத்தூய்மையுடனும் இருப்பதால் அது தனித்துவப்படுத்தப்பட்டுள்ளது. பசியோடும், தாகத்தோடும் இருப்பது மட்டும் நோன்பாகாது. இவைகளைக் கட்டுப்படுத்துவது போல் மற்ற எல்லா பாவங்களையும் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த நோன்பை ஒரு சடங்காகச் செய்பவர்களுக்கு எந்தவித பலனும் இல்லை. ஒருவர் கெட்ட பேச்சுக்களையும், கெட்ட செயல்களையும் விட்டுவிடாமல் உணவை விடுவதிலும், குடியை விடுவதிலும் மட்டும் ஆர்வம் கொள்வதால் பயனை அடைய முடியாது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
நோன்பும் விதிவிலக்கும்
பருவமடைந்த இஸ்லாம் ஆண், பெண் அனைவரும் நோன்பு இருப்பது கடமையாகும். இருப்பினும் சில அவசியங்களின் அடிப்படையில் நோன்பு இருப்பதிலிருந்து கீழ்காணும் நிலையில் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
முதுமை மற்றும் நீங்காத நோயின் காரணத்தினால் நோன்பு நோற்க முடியாதவர்கள் ஒவ்வொரு நோன்பிற்குப் பதிலாக ஒரு ஏழைக்கு உணவளிக்க வேண்டும்.
பைத்தியக்காரர்கள், நன்மை-தீமையை பிரித்தறிய முடியாத மூளை வளர்ச்சி குன்றியவர்கள், வயோதிகத்தால் புத்தி பேதலித்தவர்கள் ஆகியோர் நோன்பு நோற்பது கடமையில்லை. நோன்புக்கு பதிலாக ஏழைகளுக்கு உணவு ஏதும் கொடுக்க வேண்டியதுமில்லை.
சில நாட்களில் நீங்கிவிடும் என்று எதிர்பார்க்கப்படும் நோயாக இருந்தால் அந்த நோயின் காரணமாகவும் நோன்பை விட்டுவிட அனுமதியுள்ளது. நோய் நீங்கியபின் விடுபட்ட நோன்புகளை நோற்க வேண்டும்.
பயணம் செய்பவர்களுக்கு நோன்பை விட்டுவிட அனுமதியுள்ளது. ஊர் திரும்பியபின் விடுபட்ட நோன்புகளை நோற்க வேண்டும்.
கர்ப்பமாக இருக்கும் பெண், அல்லது பாலூட்டிக் கொண்டிருக்கும் பெண் நோன்பு நோற்பதால் தனக்கோ அல்லது குழந்தைக்கோ ஏதேனும் துன்பம் வரலாம் என்று பயந்தால் நோன்பை விட்டுவிட அனுமதியுள்ளது. அந்தப்பயம் நீங்கியபின் விடுபட்ட நோன்புகளை நோற்க வேண்டும்.
மாதவிடாய் அல்லது பிரசவ இரத்தம் வந்துவிட்டால் நோன்பு நோற்கக்கூடாது. இரத்தம் நின்ற பிறகு விடுபட்ட நோன்புகளை நோற்க வேண்டும்.
"தீ" மற்றும் நீரில் மூழ்குதல் போன்ற ஆபத்துக்குள்ளானவர்களை காப்பாற்றுவதற்காக நோன்பை விட்டுவிட அனுமதியுள்ளது.