இஸ்லாம்
இசுலாம்
இசுலாம் (இஸ்லாம் الإسلام, அரபு: الإسلام; al-'islām, Islam) என்பது ஒரிறைக் கொள்கையைக் கொண்ட ஒரு ஆபிரகாமிய மதமாகும். உலகம் முழுவதும் 1.57 பில்லியன் மக்கள் இம்மதத்தை பின்பற்றுகிறார்கள்[1]. இது உலகின் மொத்த மக்கள்தொகையில் 23 சதவீதமாகும். இசுலாம், கிறித்தவத்துக்கு அடுத்தபடியாக உலகில் இரண்டாவது பெரியதும் அதி வேகமாக வளர்ந்து வரும் மதங்களில் ஒன்றும் ஆகும்[2]. இது இறைவனால் முகம்மது நபிக்கு சொல்லப்பட்ட செய்திகளின் தொகுப்பான குர் ஆன் எனப்படும் வேதத்தின் அடிப்படையில் இயங்குகின்றது. இறப்பிற்கு பிறகான மறுமை வாழ்வை இது குறிக்கோளாக கொண்டது. இறைவனை நம்புவது, அவனது கட்டளைப்படி நடப்பது என்பதன் மூலம் முடிவற்ற மறுமை வாழ்வின் சுகங்களை பெற முடியும் என்பது இசுலாமின் நம்பிக்கை. இறை நம்பிக்கை, இறை வணக்கம், நோன்பு, கட்டாய பொருள்தானம், மெக்காவை நோக்கிய புனிதப்பயணம் ஆகிய ஐந்தும் இசுலாமின் கட்டாயக் கடமைகளாகும்.
இசுலாம் இரண்டு அடிப்படை மூலாதாரங்களை மட்டும் கொண்டு அமைந்தது. 1. அல்லாஹ்வின் வேதம். (குர் ஆன்) 2. அல்லாஹ்வின் இறுதித் தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் வாழ்க்கையில் மார்க்கம் என்ற ரீதியில் அமுல்படுத்தியவைகள். (ஹதீஸ்)
ஏழாம் நூற்றாண்டில் முகம்மது நபி இந்த மார்க்கத்தை மெக்கா நகரில் பரப்பத் தொடங்கினார். இவர் இறைவனின் தூதர் என்பது இசுலாமியர்களின் நம்பிக்கை. இசுலாமின் மூலமான குர்ஆன் இவரை முதல் மனிதர் ஆதாம் முதல் அனுப்பப்பட்டு வந்த இறை தூதர்களில் இறுதியானவராக அடையாளப்படுத்துகிறது.
ஆதம் (அலை), நூஹ் (அலை) (நோவா), இப்ராகிம் (அலை) (ஆபிரகாம்), இஸ்மாயில் (அலை), தாவூத் (அலை), மூசா (அலை) (மோசே) மற்றும் ஈசா (அலை) போன்ற முன் சென்ற நபிமார்களுக்கும் இறைவனின் கட்டளைகள் சொல்லப்பட்டிருக்கிறது.
ஆனால் முகம்மது (ஸல்) அவர்களுக்கு வழங்கிய திருமறை அல் குர்ஆன் இஸ்லாத்திற்க்கு ஒரு முழு வடிவம் தருவதாகவும் இதற்கு முன் சென்ற நபிமார்களின் வாழ்க்கையை உறுதி செய்வதாகவும் இருக்கிறது.